Tuesday, February 12, 2013

நீ....நான்....காதல்.....மழை..!!!


Friday, February 1, 2013

எனது கவிதை நூல் வெளியீட்டு விழா.....

எனது வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....

எனது முதல் கவிதை தொகுப்பான நீ... நான் ... காதல் ... மழை.. விஜயா பதிப்பகத்தின் மூலமாக வெளிவர இருக்கிறது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.... எனக்கு உற்சாகம் ஊக்கமும் கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.....



நீ... நான் ... காதல் ... மழை...    - பெ. முரளி

நாள்:24-02-2013

இடம் :AVKC மஹால் ...மேலூர், மதுரை.

பேச: 9952672271



Saturday, March 20, 2010

முதல் கவிதை!!!



ஓடைப்பக்கத்து

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என்
 
முதல் கவிதை!!!

நிலவு....!!!

அமாவாசை எல்லாம்

ஒன்றுமில்லை....

நான் சொன்ன

முத்தக்கவிதை கேட்டு

வெட்கத்தில்

முகம் மூடியிருக்கிறது

நிலவு....!!!

நீ....நான்.....பக்கம்.....பக்கம்!!!


என்

பிராத்தனைகளால்

கடவுளின்

கவனத்தை ஈர்க்கமுடியுமென்றால்

உன் அருகாமையை

உறுதிப்படுத்த மட்டும்

கேட்டுக்கொள்வேன்.....!


மற்றவை

நாம்

பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம்.....!!!

நாகரீக கோமாளி...!!!


இது கனவுலகம்.....

அதி நவீன தொழில்நுட்பங்களின்

வேலைப்பாடுகளில்

கட்டுப்பாடுகளுக்கு விலை பேசி

தினம் ஒரு தோற்றமென

மாற்றப்படுகிறது வாழ்க்கை.....!


வரலாறென்று நாம் போற்றித்திரியும்

நேற்றைய எதுவும்

இன்று தடயங்களில்லாமல்

புதுப்பிக்கப்படுகின்றன...

எப்படியான வாழ்க்கைமுறை

இதுவரை கடந்ததென்பதைக்கூட

திரும்பிப் பார்க்க நேரமில்லை....



ஒளிப்பதிவுக்கருவிக்கு

எதிரில் நின்று பேசும்

மனனம் செய்த வாக்கியங்களெல்லாம்....

வாழ்க்கை என்று வரும் போது

சாத்தியப்படுவதில்லையே....



கால ஓட்டத்தில்

மாயை நிறைந்த

அறிவியல் மாற்றங்கள்

இயல்பு நிலைக்கு

விலை பேசிக்கொண்டிருக்க

அத்தனையும் உதறித்தள்ளிவிட்டு

புதிய உடையில்

நுழைந்து கொள்கிறது உலகம்....



பழமை பேசித்திரியும்

நாமெல்லாம்

பைத்தியமாக்கப்படுவதற்குள்

ஆளுக்கொரு முகமூடியுடன்

தயாராகுங்கள்...........

நாகரீகக் கோமாளியாவதற்கு...!!!

கவிதையாதலின் வழியில்..........!!!


எழுத்துக்கள் வார்த்தைகளாகி

வார்த்தைகள் வாக்கியங்களாகி

வாக்கியங்கள் கவிதையாகும் வழியில்

முடிவுறாமல் தடுமாறுகிறதென் முயற்சி.....


முயற்சியின் தொடர்ச்சியாய்

உன் கால் கொலுசை

வழித்துணையாக்கி

முட்டி மோதி

எப்படியோ

முடித்து விட்டேன்

கவிதையின் முற்றுப்புள்ளி வரை.....



புன்னைகையில் ஒன்றும்

கூந்தலில் பூவைப்பதில் என்றும்

முரண்பாடுகளுக்கென ஒதுக்கி முறைப்பது வரை

எப்படி உன்னால் மட்டும்

உபகரணங்கள் ஏதுமின்றி

நொடிக்கொரு கவிதையை

அரங்கேற்ற முடிகின்றதோ.....!!!

அரிதாரம்.....!!!



அன்றாட வாழ்க்கையின்

அத்தியாயங்களுக்கு

அழகூட்ட முயன்று

அரிதாரம் பூசிப்பூசி

வெறுத்துவிட்ட

வறண்ட உதடுகளுக்கு

தவணை முறையில்

செயற்கையாய்

உயிரெனும்

செரிவூட்டப்படுகின்றது......



காற்றின் எதிர்திசைப்பறவையாய்

இறுகிய மனதும்

தளர் நடையுமாய்

வழியில் வரும்

பரிட்சயமானவர்களின்

புன்னகைக்குத் திணறும்

உதடுகள்

உதிர்த்துவிட்டுச்செல்லும்

ஒப்புக்கொன்றை.....



அதிகார வர்க்கத்தின்

புரிதலின் அலைவரிசையில்

அவசரமாய்

தவறி வரும் வார்த்தைகள்

இதயம் கிழித்து

உதிரம் பருக

இயலாமையின் விளிம்பில்

ஒளிப்படக்கருவியின் முன் நிற்கும்

செயற்கை புன்னகையாய்

அலுத்து விடுகின்றது

அலுவலக வாழ்க்கை



சில தனிமைகள்

சில மௌனங்களென

இதயத்தாடையில்

மென்று துப்பும்

கசப்பான உணர்வுகளில்

அவசியமற்ற

போலிப்புன்னகைகளிலிருந்து

விடுவித்துக்கொள்ள

ஒரு வேளை

விலங்கினமாய் பிறந்திருந்தால்

சிறப்பாய் இருந்திருக்குமென்று

தோன்றும் தருணங்களில்



நிலவொளியை உள்ளங்கையில்

அள்ளி உயர்த்திப்பிடித்து

சிதறடிக்கும் அரிதாரத்தின்

அர்த்தம் தெரியாத

மழலைச்சிரிப்பு

தெளிந்த பிரவாகமாய்

நம் மனசுக்குள்

சிதிலமடைந்த உணர்வுகளின்

சாம்பலில்

சில்லென்றதொரு

கவிதை எழுதிச்செல்லும்......!!!

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!


நித்தம்... நித்தம்.....

நீ

எத்தனை

முத்தங்கள் தந்தாலும்



புதிய நாளில்

 நான்

ஏழையாகவே

வந்து நிற்கிறேன் !!!!!

நீ....நான்....காதல்.....முத்தம்!!!

உன்

கண்ணீர் துளிகள் கூட 

கன்னத்தை முத்தமிட்டு தான்

விடை பெறுகின்றன.......


உனைப்பிரிய மனமில்லாத

எனக்கு மட்டும் என்ன

விதி விலக்கா?