Saturday, March 20, 2010

முதல் கவிதை!!!ஓடைப்பக்கத்து

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என்
 
முதல் கவிதை!!!

நிலவு....!!!

அமாவாசை எல்லாம்

ஒன்றுமில்லை....

நான் சொன்ன

முத்தக்கவிதை கேட்டு

வெட்கத்தில்

முகம் மூடியிருக்கிறது

நிலவு....!!!

நீ....நான்.....பக்கம்.....பக்கம்!!!


என்

பிராத்தனைகளால்

கடவுளின்

கவனத்தை ஈர்க்கமுடியுமென்றால்

உன் அருகாமையை

உறுதிப்படுத்த மட்டும்

கேட்டுக்கொள்வேன்.....!


மற்றவை

நாம்

பேசித்தீர்மானித்துக்கொள்ளலாம்.....!!!

நாகரீக கோமாளி...!!!


இது கனவுலகம்.....

அதி நவீன தொழில்நுட்பங்களின்

வேலைப்பாடுகளில்

கட்டுப்பாடுகளுக்கு விலை பேசி

தினம் ஒரு தோற்றமென

மாற்றப்படுகிறது வாழ்க்கை.....!


வரலாறென்று நாம் போற்றித்திரியும்

நேற்றைய எதுவும்

இன்று தடயங்களில்லாமல்

புதுப்பிக்கப்படுகின்றன...

எப்படியான வாழ்க்கைமுறை

இதுவரை கடந்ததென்பதைக்கூட

திரும்பிப் பார்க்க நேரமில்லை....ஒளிப்பதிவுக்கருவிக்கு

எதிரில் நின்று பேசும்

மனனம் செய்த வாக்கியங்களெல்லாம்....

வாழ்க்கை என்று வரும் போது

சாத்தியப்படுவதில்லையே....கால ஓட்டத்தில்

மாயை நிறைந்த

அறிவியல் மாற்றங்கள்

இயல்பு நிலைக்கு

விலை பேசிக்கொண்டிருக்க

அத்தனையும் உதறித்தள்ளிவிட்டு

புதிய உடையில்

நுழைந்து கொள்கிறது உலகம்....பழமை பேசித்திரியும்

நாமெல்லாம்

பைத்தியமாக்கப்படுவதற்குள்

ஆளுக்கொரு முகமூடியுடன்

தயாராகுங்கள்...........

நாகரீகக் கோமாளியாவதற்கு...!!!

கவிதையாதலின் வழியில்..........!!!


எழுத்துக்கள் வார்த்தைகளாகி

வார்த்தைகள் வாக்கியங்களாகி

வாக்கியங்கள் கவிதையாகும் வழியில்

முடிவுறாமல் தடுமாறுகிறதென் முயற்சி.....


முயற்சியின் தொடர்ச்சியாய்

உன் கால் கொலுசை

வழித்துணையாக்கி

முட்டி மோதி

எப்படியோ

முடித்து விட்டேன்

கவிதையின் முற்றுப்புள்ளி வரை.....புன்னைகையில் ஒன்றும்

கூந்தலில் பூவைப்பதில் என்றும்

முரண்பாடுகளுக்கென ஒதுக்கி முறைப்பது வரை

எப்படி உன்னால் மட்டும்

உபகரணங்கள் ஏதுமின்றி

நொடிக்கொரு கவிதையை

அரங்கேற்ற முடிகின்றதோ.....!!!

அரிதாரம்.....!!!அன்றாட வாழ்க்கையின்

அத்தியாயங்களுக்கு

அழகூட்ட முயன்று

அரிதாரம் பூசிப்பூசி

வெறுத்துவிட்ட

வறண்ட உதடுகளுக்கு

தவணை முறையில்

செயற்கையாய்

உயிரெனும்

செரிவூட்டப்படுகின்றது......காற்றின் எதிர்திசைப்பறவையாய்

இறுகிய மனதும்

தளர் நடையுமாய்

வழியில் வரும்

பரிட்சயமானவர்களின்

புன்னகைக்குத் திணறும்

உதடுகள்

உதிர்த்துவிட்டுச்செல்லும்

ஒப்புக்கொன்றை.....அதிகார வர்க்கத்தின்

புரிதலின் அலைவரிசையில்

அவசரமாய்

தவறி வரும் வார்த்தைகள்

இதயம் கிழித்து

உதிரம் பருக

இயலாமையின் விளிம்பில்

ஒளிப்படக்கருவியின் முன் நிற்கும்

செயற்கை புன்னகையாய்

அலுத்து விடுகின்றது

அலுவலக வாழ்க்கைசில தனிமைகள்

சில மௌனங்களென

இதயத்தாடையில்

மென்று துப்பும்

கசப்பான உணர்வுகளில்

அவசியமற்ற

போலிப்புன்னகைகளிலிருந்து

விடுவித்துக்கொள்ள

ஒரு வேளை

விலங்கினமாய் பிறந்திருந்தால்

சிறப்பாய் இருந்திருக்குமென்று

தோன்றும் தருணங்களில்நிலவொளியை உள்ளங்கையில்

அள்ளி உயர்த்திப்பிடித்து

சிதறடிக்கும் அரிதாரத்தின்

அர்த்தம் தெரியாத

மழலைச்சிரிப்பு

தெளிந்த பிரவாகமாய்

நம் மனசுக்குள்

சிதிலமடைந்த உணர்வுகளின்

சாம்பலில்

சில்லென்றதொரு

கவிதை எழுதிச்செல்லும்......!!!

நீ.....நான்....காதல் ...... முத்தம்!!!


நித்தம்... நித்தம்.....

நீ

எத்தனை

முத்தங்கள் தந்தாலும்புதிய நாளில்

 நான்

ஏழையாகவே

வந்து நிற்கிறேன் !!!!!

நீ....நான்....காதல்.....முத்தம்!!!

உன்

கண்ணீர் துளிகள் கூட 

கன்னத்தை முத்தமிட்டு தான்

விடை பெறுகின்றன.......


உனைப்பிரிய மனமில்லாத

எனக்கு மட்டும் என்ன

விதி விலக்கா?

நீ....நான்....காதல்.....பூ!!!


நான்

வாங்கித் தந்த

பூவை

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு

வைத்து விட சொல்கிறாய்......!உன் கூந்தலுக்குள்

மாட்டிக் கொள்கிறது

பூவும்

அதனோடு சேர்ந்து

என் மனசும்!!!!!

நீ....நான்....காதல்.....மழை..!!!

நீ

காலையில்

வாசல் தெளிக்கையில்....

மழை தானோ என்று

குடை எடுத்து

வந்து விடுகின்றன

காளான்கள்!!!!!

நீ....நான்....காதல்.....மழை..!!!


மரம்

             வளர்ப்போம்!!!

மழை
            
              பெறுவோம்!!!


மரம்
           
                 நட்டுக் கொண்டிருக்கிறேன்........

நீ.........

                 வருவாய் தானே?

நீ....நான்....காதல்.....நிலா..!!!


நடு நிசியில்

 பார்த்து ரசிக்க

யாருமற்று

கடந்து செல்கிறது

நிலா...!!!
உனைப் பற்றிய

 கனவுகளோடு

அயர்ந்து உறங்கும்

 என்னையும் சேர்த்து …….!!!

நீ....நான்....காதல்.....முத்தம்..!!!

புரிதலின்

நிலை தாண்டி

உணர்தலில்

 நிலை கொள்ளும்

மொழியைக் கடந்த

ஒரு

உன்னத

பரிமாற்றம்…

முத்தம்..!!!

நீ... நான் ..... காதல் ...... மழை.... !!!

தனக்கும்

 உனக்கும்

இடையில் இருக்கும்

இந்த குடை மீது

கோபமில்லாமல் இருக்குமா

 அந்த மழைக்கு.......அதனால் தான்

அடி

வெளுத்து வாங்குகிறது !!!!!

நீ... நான் ..... காதல் ...... மழை.... !!!


மழைக்கும்...

எனக்கும்...

எவ்வித

சம்பந்தமும்

இல்லை என்கிறாய்.....
ஏனோ...

நீ...

என்ன சொன்னாலும்

நான்

நனைந்து கொண்டே தான் இருக்கிறேன்.........!!!

Friday, March 19, 2010

மழை!!!


தாழ்வாரம்,

முற்றம் என்று......

வெளுத்து வாங்குகிறது

மழை!!!
பற்றாக்குறைக்கு

மனசுக்குள்

நீ வேறு!!!

நீ... நான் ..... காதல் ...... மழை....!!!

நீ...

ஒரு நாள்

 வரவில்லைஎன்றால் கூட


என் இதயம்

பாலைவனமாகிப் போய் விடுகின்றது!


ஆகவே

நான்...

என்ன சொல்ல வருகினேன்றால்.....................

நீ... நான்... காதல்... மழை....!!!


இன்று

வானம்

மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.........நீ

உன்

கூந்தலை

சிக்கெடுத்துக் கொண்டிருக்கிறாய்.........!

கவிதை........!!!


இது

காதல் கடிதமல்ல....

வெறும் கவிதையே......!

படித்த பின்

காதல் வயப்பட்டால்
 
அதற்கு

 நான் பொறுப்பல்ல.....!!!

மனமெனும் வனத்தில்.......‏!!!தனித்து விடப்பட்ட இரவொன்றில்....

நிகழ்வுகளை அசைபோட்டபடி

கனவுகளில் தொலைந்து விடும் முயற்சிகளோடு

புறப்பட்டிருந்தேன் வழிகளைப்பற்றிய கவலைகளின்றி

என் மனமெனும் வனத்திற்குள்....


எதிர்ப்பட்ட உருவங்களெல்லாம்

எதையோ முணுமுணுத்தபடி

என் எதிரில் வந்து பின்

கடந்து செல்கின்றன.....

அதில் அவர்களது குறைகளையும்

கோபங்களையும் கொட்டித்தீர்ப்பதற்கான

ஒத்த கருத்துடைய

ஒரு தேடல் தேங்கிக்கிடக்கின்றது.....நான் எப்படிப்பட்டவன்

என்பதை யூகிப்பதில்

கவனம் செலுத்துகிறார்களா

என்றெனக்குத்தெரியவில்லை....

அந்தத்தடுமாற்றங்களில்

அவர்கள் தங்களை

தற்காத்துக்கொள்ளும்

முயற்சிகளை

புரிந்துகொள்ள முடிகின்றது.....ஒருவேளை அவர்கள்

ஏதோவொரு தேவைக்கான

எதிர்பார்ப்புடன்

என் எண்ணங்களில்

நல்லவர்களாக முனையும்

முயற்சிகளும்

இருந்திருக்கக்கூடும்.....புன்னகைக்கக்கூட நேரமில்லாதவர்களாய்

காட்டிக்கொள்ளும் சிலர்

வழிதவறி

வனத்தின்

குரூரப்பள்ளத்தாக்குகளில்

வீழ்ந்த வண்ணமிருக்கின்றனர்.....சலனமின்றி நான் என்

பயணங்களில் கவனம் செலுத்த

இருள் கிழித்து

சில ஒளிக்கதிர்கள்

என் கரம் பற்றிக்கொண்டிருக்கின்றன

விடியலுக்கான அறிவிப்பொன்றுடன்......!!!

எழுதப்படாத கவிதை.....!!!


ஏன் எதற்கென்று தெரியவில்லை.....

ஏதோவொரு நெருடல்

என் இரவுத்தூக்கங்களை

விரட்டியடித்துக்கொண்டிருக்கின்றது....எத்தனை சிந்தித்தும்

என் வெற்றுக்காகிதத்தில்

வார்த்தைகளேதும்

வந்தமர மறுக்கின்றன.....இருந்தும் ஏதோ ஒன்று

எழுதப்படாமலே இருப்பதாக

காகிதங்கள் எனைக்குறை கூற

இதோ வருகிறேனென்று

இழுத்து மூடிவிட்டு

எழுந்து நடக்கிறேன்....

இருள் கவிந்த தனிமையில்

மருவின் துணையோடு.......பிரபஞ்ச வெளியை

உற்று நோக்கியபடி

மின்னும் நட்சத்திரங்களுக்கப்பால்

என்ன இருக்குமென்ற

வியமிகு கேள்விகள்

அவிழ்க்கமுடியாத முடிச்சுக்களாய்...

பதிலின்றிக்கடந்து போக

பிரமித்தபடியே

திரும்பிகொண்டிருக்கிறேன்.....என் எழுதப்படாத கவிதை

இதுவாயிருக்குமோ

என்றிருந்த தருணத்தில்....


நினைவில் வந்தாள்....


நேற்றைய விடியலில்

வறுமையின் பிடியில்

வாடிய முகத்துடன்

பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுமி......!!!

மழை வேண்டாம்.....!!!


வான் மேகங்களே......!

இன்று மழை வேண்டாம்......!


நினைவிருக்கிறதா?

உங்கள் வரவினில்

குதூகலிக்கும்- அதே

மழைக்காதலன் பேசுகிறேன்......!!!


சற்று தள்ளிப்போடுங்கள்.....

இன்று மழை வேண்டாம்......!


வரும் வழியில் விவசாயி ஒருவன்

விளைந்த நெல்

வீணாகி விடுமென்று

புலம்பிக்கொண்டிருக்கின்றான்.....!


கூரை வேய்வதற்குள்

கொட்டித்தீர்த்துவிடுமோவென்று

மற்றொருவனும்.......


தள்ளாடிய வயதில்

குடை கொண்டு வர

மறந்துவிட்டதாக

ஒரு கிழவியுமாய்....

தொடர்ந்து கொண்டிருக்க......மழை வருமென்று

கழுதைக்கும் கழுதைக்கும்

கல்யாணம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்

இவ்வீணர்களின் மூடநம்பிக்கையை

விரட்டியடிக்கவேணும்.........


சற்று தள்ளிப்போடுங்கள்.....!

இன்று மழை வேண்டாம்.....!!!

Thursday, March 18, 2010

நீ... நான்..... காதல்.....காதல்......!!!


அந்தக்கார்கால முற்றத்தில்

பட்டுத்தெறிக்கும்

மழைத்துளிகள் அள்ளி

உன் மேனியில் தெளிக்கிறேன்......

அவசரமாய் இடைமறித்து

நீ என் காதைத்திருக,

அப்பாவியாய் நானும் வலிக்கிறதென

முகம் சுருக்கி நடிக்க,

சட்டென்று சிரிப்பு வந்தவளாய்....

வெட்கப்பட்டு அந்தப்பக்கம்

திரும்பிக்கொள்ள

உன் சிவந்த முகத்தை

கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறேன்......****************************************************************அப்படி என்னதான்

ரகசியம் சொல்லப்போகிறேனென்று

வெட்கம் கலந்த ஆவலோடு

காதைகொடுக்கிறாய்.....

ஏதோ நான் சொல்லித்தொலைக்க

ச்சீ  என்று சொல்லி அங்கிருந்து நீ ஓட

உன்னை விரட்டிப்பிடித்து சேர்த்து

அணைத்தபோது நெஞ்சில்

சாய்ந்துகொண்டு

என்னை விலகிப் போகச்சொல்கிறாய்.....

அதன் அர்த்தம் புரிந்தவனாய்

இன்னும் இறுக்கி அணைத்துக்கொள்கிறேன்


*******************************************************************சமையலறையில் உதவி செய்வதாகச்

சொல்லி உன்னை உரசி விளையாடும்

என்னைச்

சற்று தள்ளி நில்லடா என்று

சொல்லி கரண்டியாலே

எச்சரிக்கை செய்கிறாய்.....

ஒற்றை முத்தம் லஞ்சமாய்

தந்தால் மட்டும் நடக்குமென்று

சிறுபிள்ளையாய் அடம்பிடிக்க

புன்னகையோடு என்னைக்கட்டிக்கொள்கிறாய்....

அங்கே கடுகும் , கருவேப்பிலையும்

சண்டையிட்டுக்கொண்டிருக்க

இங்கே நம் இதழ்களும்.....


*********************************************************************வலிக்காமல் தலையில் கொட்டு வைத்து

கணக்குப்பாடம் கூட தெரியாதா என்கிறாய்....

அடி போடி ,

உன்னையே கணக்குப்பண்ணிய எனக்கு

இதெல்லாம் எம்மாத்திரம்.....

ஒன்றும் ஒன்றும் நான்கென்று வாதிடும் எனக்கு

இன்னும் பத்து மாசம் அவகாசம் கொடு

உன்னை வைத்தே சரியென நிரூபிப்பேன்.....


******************************************************************நீ தோட்டத்தில் பூப்பறிக்க

பின்னாலிருந்து சட்டென்று தோன்றி

அப்படியே இறுக்கி அணைக்க

அந்தப்பூக்கள் உயரச்சிதறி

நம் மேல் பரவுகிறது.....

திருட்டுப்பயலே என்று சிணுங்கிக்கொண்டே

எங்கே எடுத்துவிடுவேனோ என்று

அவசரமாய்...என் கைகளை இறுகப்பற்றி

இணைத்துக்கொள்கிறாய்....

பூக்கள் கேலி செய்வதையும்

பொருட்படுத்தாமல்

என் நெஞ்சில் உன் விரல்கொண்டு

கோலம் இட்டுக்கொண்டிருக்கிறாய்....


*************************************************************************
நிகழ்ச்சியொன்றில்

நண்பர்கள் ஒன்றுகூடி

ஏதேதோ சுவாரஸ்யமாய்

பேசிக்கொண்டிருக்க யாருக்கும் தெரியாமல்

நான் உன் இடுப்பைக்கிள்ள

துள்ளிக்குதித்த உன்னை

என்ன ஆச்சு என்று  எல்லோரும் கேட்க

ஒன்றுமில்லை எறும்பு என்று

சமாளித்து வழியும் உன் முகத்தைபார்த்து

குறும்பாய் சிரிக்க

இருடா ,

உன்னை அப்புறமா வச்சுக்கிறேன் என்கிறாய்...

அதெல்லாம் முடியாது

நான்தான் உன்ன காலம்பூரா வச்சுக்குவேன்.....


***************************************************************உன்னை மடியில் கிடத்தி

தலை மயிர் வருடிக்கொண்டே

தேவதை கதைகள் சொல்ல

ரசித்துக்கிடந்த உன் கன்னத்தை

அவசரமாய் கடித்துவிட்டு எழுந்து

ஓடுகையில் குச்சியெடுத்து

என்னை விரட்டிப்பிடித்து

இன்னொரு கன்னத்தை  காட்டுகிறாய்......

அதையும் கடித்து வைக்கவாம்....!


****************************************************************

Saturday, March 13, 2010

யுக தாரம்!‏


பட்டாம்பூச்சியாய்

பறந்து திரிந்தவள்

பருவமடைந்தபின்

துணையொன்றின்

அவசியம் கருதி

பெரியோர்களால்

அரிதாரம் பூசி

புதியதோர்

அத்தியாயத்தில்

அவதாரம் எடுக்கும்

அவள் தாரம்....!


பல வண்ணக்

கனவுகள் சுமந்து

உலகம் சுற்றும் ஆசையில்

வலது கால் எடுத்து வைக்க

தொலைந்ததுதான் மிச்சம்

கனவுகளோடு சேர்ந்து

நான்கு சுவர்களுக்குள்....அங்கே அலுவலகமும்

சக நண்பர்களுமாய்

அவனுக்குக்

காலம் நகர

இங்கே

காத்திருந்து, காத்திருந்து

வெறுமையை வரவேற்று

தனிமை பழகிவிட்டிருக்கத்

தொலைகாட்சி தொடர்களின்

கதாப்பாத்திரங்களே

அவளுக்கான உறவுகளின்

வெற்றிடம் நிரப்பிச்செல்கின்றன.....சமையல் சுவையென்றும்....

மருதாணி அழகென்றும்.....

சேலையில் சிலையென்றும் ......

கண்ணீர் துடைத்தும் ....

தோள் கொடுத்தும் .....

சுக துக்கங்களில் பங்கெடுத்தும்

அவர்களுக்கான பெரும் பங்கோடு

கரைகிறது புதிர் நிறைந்த வாழ்க்கை.....எப்பொழுதாவது

எட்டிப்பார்த்துவிட்டுச்செல்லும்

கணவனால் ஞாபகப்படுத்தப்படுகிறது

திருமண உறவொன்று.....

ஒரு வேளை ஞாபகப்படுத்த

மறந்துவிட்டிருக்கக்கூடும்

அவளுக்குள் உறங்கிக்கிடக்கும்

பெண்மையின் உணர்வொன்று....


காலப்போக்கில்

கணவனுக்கான உறவையும்

தொலைக்காட்சிப்பெட்டியே

அபகரித்துவிட்டிருக்க...

கடைசிவரை புரியாமலேயே

வேடிக்கையாய் முடிகிறது

திருமண பந்தமென்னும்

விந்தையான வாழ்க்கை....!கவலைகளற்று

கண்ணயர்ந்த பொழுதுகள்

வாழ்க்கைப்புத்தகத்தில் வெகுசில

அங்குமிங்குமாய்

ஒட்டிக்கொண்டிருக்க

நாட்காட்டியின் நகர்வைக்கூட

கவனிக்காமல்

அலுவலகமே உலகமென்று

அவனும் உழைத்துக்கொண்டிருக்க

சரிந்து விடுகிறது வாழ்க்கை

சராசரிக்கும் கீழாய்.....

விடிந்த பின்னும்........!அழகான கார்காலத்து

மாலைப்பொழுதொன்றில்

எதிர்பாராத அந்த  

முதல் சந்திப்பில்

இடைவிடாது

கொஞ்சும் பேச்சில்

மழையாய்

என் மனசுக்குள்

கொட்டித்தீர்க்க........

காதலின் தூர விலகித்திரிந்த

என் மீது

அனிச்சையாய்

ஒரு தடை உத்தரவு பிறப்பித்து

அவசரநிலைப்பிரகடனமொன்றில்

மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட்ட

 என்

முடிவொன்றின்

மறுவடிவம் தந்து மறைந்தாள்......அவ்வழகான நிகழ்வெந்தன்

அடிமனதில் பதிந்திருக்க

விடுபட மனமின்றி

திசையெங்கும்

நிறைந்திருக்க

வழக்கத்திற்கு மாறாக

கல்லும் கண்ணயரும்

பின்னிரவும் ,

இளங்காலையும்

புணரும் விவரிக்கமுடியாத

 பொழுதொன்றில்

அவளே ... அவள்!

என் கனவுக்குள்

பலமுனைத்தாக்குதல்களை

தொடுத்திருக்க

இன்னும்...

விடிந்த பின்னும்.....

படுக்கையறையில்

கவிழ்ந்துகிடக்கிறேன்!

அவளிடம் இழந்திருந்த

இதயத்தின் நிலப்பரப்பை

திரும்பப்பெற மனமின்றி........!

தவம்..........!!!


தவத்தை மெச்சினேன்

 பக்தா.............!

என்று

எதிரில் வந்தார் கடவுள்!!!

அவளுக்கான

தவம்

இது என்று சொல்லி

திருப்பி

அனுப்பி விட்டேன்...!!!

மொட்டு...................!


பட்டுப்போன

செடிகள் கூட

உன்

பட்டுப்போன்ற கைகளால்

தொட்டு போனதும்

மெல்ல துளிர்த்து

மொட்டு விடத் துவங்குகின்றன...........!!!

ஈர்ப்பு விசை.....................!


புவி ஈர்ப்பு

விசையைப் போல

நிலவு ஈர்ப்பு விசை

இருக்குமா என்கிறாய்.....!


இருக்காதா பின்ன......

உன் அருகில் வந்தாலே

மொத்தமாய் ஈர்த்து விடுகிறாயே......!!!

நிலவு................!


நிலவை

வேடிக்கை பார்ப்பதில்

எனக்கு அலாதிப் பிரியம்.....!


அசையாமல்

அப்படியே சற்று நேரம்

அமர்ந்து இருக்க முடியுமா?

இனி.......


வீட்டில்

திட்டினார்களா?


ஏன்

தாமதமாய்

வந்தாய் என்று.......

இனி

சீக்கிரமாகவே

வந்து விடு.......


தாமதமாகப் போனால்

என்ன சொல்லி
 
சமாளிக்கலாம் என்று
 
யோசித்து வைப்போம்........!!!

காதல்....!


காதல் தேசத்து

போக்குவரத்து நெரிசலில்

சிக்கிப்பரிதவிக்கிறேன்

உன்னில் இருந்து

காதலுக்கான

பச்சை விளக்கின்

எரிதலை
 
எதிர்பார்த்தபடி.............!!!

அவள் மட்டும்......!


துருவங்களின்

தொட்டடுத்த தூரத்தில்

காட்சிகளுக்கு

புது  வண்ணம்

பூசிக்கொண்டிருக்கும் சூரியன்

விடைபெறும் தருணத்தில்.........

வழக்கம் போல்

நதிக்கரையில்

கால் போன போக்கில் நடைபோட

காற்றில் போக்கில்

சுற்றித்திரியும்

இலைச்சருகுகளாய்

கனவுகள்

மனசுக்குள் இடம்பெயர

நிசப்தத்தின் உச்சத்தில்

தவமிருக்கும்

அவள் நினைவுகள்

மெல்லத்துயில் எழுகின்றன.....

தனிமையில்

உயிர்பெறுகின்றன.....


உயிரணுக்களும்,

உணர்வுமொட்டுக்களும்

ஓய்வுக்காலம் முடிந்து

பணிக்குத்திரும்பும் அந்த

இருள் சூழ்ந்த

மங்கலான


மாலைப்பொழுதில்

மறுகரையில் நாணல்கள்

காத்திருக்கும் என்றறிந்தும்

அவளின் வரவுக்காய்

கைகட்டி காத்திருக்கிறது

ஊர் சுற்றும் காற்று.......


வேண்டுமென்றே

மௌனம் கலைப்பதற்காக

என் விரல்களிலிருந்து விடைபெறும்

கூழாங்கற்களும்

வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன

தண்ணீரின் மேற்பரப்பில்.....

அதே அவளுக்கான

வரவின் எதிர்பார்ப்புடன்....


என் இரவெங்கும்

சோகங்கள் ஒருசேர

அவள் நினைவுகளை

நிலவின் துணையோடு

வரவழைத்திருக்க

அவள்

மட்டும்

வந்தபாடில்லை ....!!!

Monday, March 8, 2010

கவிதையாய்..........!இரு இதயங்களின்

                        மகரந்தச்சேர்க்கையில்

கருவுற்ற நம் காதலை

                       கவிதையாய் பிரசவிக்கிறேன்!!!

எங்களூர்த்திருவிழா...!‏


ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடி

தேர் திருவிழாவிற்கு நாள் குறித்திருக்க.........

களைகட்டிய  ஊரெங்கும்

கதம்பம் கமகமக்க...........

சந்தனம் மணமணக்க............

மஞ்சள் தெளித்து.........

மாவிலை தோரணம் கட்டி............

பந்தக்கால் நட்டு..........

பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும்....

இனிதே துவங்கிய திருவிழா நாளில்

தாய்மார்கள் ஒன்றுகூடி

தானானை கொட்டிவர..........

வேடிக்கை பார்க்க வந்த

இளவட்டக்கூட்டமெல்லாம்

தாவணிப்பெண்களை

கூடி நின்று கேலி செய்ய.............

ஒருபுறம் அபிசேகங்களும்,

 ஆராதனைகளும்

அரங்கேறியிருக்க...........

மறுபுறம் பக்திப்பாடல்கள்

செவிகளை

 பரவசப்படுத்திக்கொண்டிருக்கும்.


தேரின் ஊர்வலம்

தெருவெங்கும்

ஜொலிஜொலிக்க

பூ, பழமெல்லாம்

வரிசையில் எடுத்து வந்து

பக்தர்கள் பூஜை செய்து

நேர்த்திக்கடன் செலுத்த

கோயில் வாசலில்

உடைந்து சிதறிய

தேங்காயின் சில்லொன்று

எதிரில் நின்றிருந்தவனின்

நெற்றி பிளந்திருக்க

சட்டை பிடித்து

சாதிக்கலவரமாகி

மறுநாள்

தலைப்புச்செய்திகளில்

இருவருக்கு

அரிவாள் வெட்டென்று

வழக்கம்போல் முடிந்திருந்தது

எங்களூர் தேர்த்திருவிழா .....!

இப்பொழுதெல்லாம்.....!!!எப்பொழுதும் படுத்ததும்

கிடந்துறங்கும் நான்

இன்று வெகுநேரமாகியும்

அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்

அவளோடு கடந்த

அன்றைய அழகான நினைவுகளை.....

நேரம் போனதே தெரியாமல்

நினைவுகளில் வலம் வர

ஒரு வழியாக கனவுகள்

என் கண்களை ஆக்கிரமித்து

கண்ணயர்ந்து தூங்கிப்போனேன்....


எருமை மாடு எந்திரிடா,

இன்னும் தூக்கத்தப்பாரு! என்ற

அம்மாவின் உரத்த குரலில்

பதறியடித்துப்பார்த்தபோது

மணி எட்டைத்தொட்டுவிட்டிருந்தது....


அவசர அவசரமாய் குளித்து

அம்மாவின் முந்தானையில் தலை துடைத்து

சாப்பிடாமல்கூட விடைபெற்று

படபடப்போடு சைக்கிளை அழுத்த

இன்னும் பத்து நிமிடங்களே எஞ்சியிருந்தது


வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு

பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது....

என்னவளை சுமந்து வரும்

எங்களூர் பேருந்து

தற்காலிக தாயாகிப்போன

தற்பெருமையில்

சற்று தாமதமாகவே வந்து நின்றது......


அவளைத்தேடும் பணியில் கண்கள்

முடுக்கிவிடப்பட்டிருக்க, மறுபக்கம்

கைகள் கம்பிகளில் தொற்றிக்கொள்ள

தொடர்கிறது நகரத்தை நோக்கிய பயணம்.....


பார்த்தும் பார்க்காதது போல்

பூத்திருந்தவள்

பூவுக்கும் புன்னகைக்கத்தெரியுமென்று

சின்னதாய் உறுதி செய்கிறாள்....


மென்மையாய் நலம் விசாரிக்க

வெட்கத்தைப் பதிலாய் தருகிறாள்...

நான் என்ன பேசுவதென்று தெரியாமல்

என்னென்னவோ பேச

சிக்கனமாய் வார்த்தைகளை

சிதறடித்து ரசிக்க வைக்கிறாள்....


புத்தகங்களை நீட்ட, எடுத்து

மடியில் சேர்த்து வைத்துக்கொள்கிறாள்...

அவைகளும் அதற்காய் காத்திருந்தவை போல்

பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்கின்றன....


இப்படியான பேருந்துப்பயணத்தில்

இன்றேனும் சொல்லிவிட வேண்டுமென்ற

முடிவோடு வந்து , ஒவ்வொரு நாளும்

திரும்பிப்போகிறேன் ....ஒருவேளை

அந்தச்சின்னப்புன்னகையை

இழக்க நேரிடுமோ என்ற

பதிலற்ற நெருடலொன்றில் .....


இனி கடிதமே சிறந்த வழியென்று - என்

காதலை எழுத்துக்களில் சேகரித்து

எடுத்துச்சென்றபோது- அன்றைய

பேருந்தில் அவள் வந்திருக்கவில்லை.....


ஏமாற்றத்துடன் அவள்

தோழியிடம் கேட்டபோது

கல்யாணம் நிச்சயமானவளுக்கு இனி

கல்லூரி எதற்கென்று

பெற்றோர் சொல்லிவிட்டார்களாம்......


நொறுங்கிய

இதயத்தின் சிதறல்களை

என்ன செய்வதென்று அறியாமல்

விரக்தியில் மெதுவாய்

வீடு திரும்பிவிட்டிருந்தேன்......


இப்பொழுதெல்லாம்

அவளின்றிக்கடந்து செல்லும்

எங்களூர்ப்பேருந்தை

பிடிக்கவும் இல்லை...

எனதிந்த விடியல்கள்

பரபரப்பாய் விடிவதும் இல்லை......!

தேவதைகளின் தேவதை....!


வானத்து நட்சத்திரங்கள்

வரையக்காத்திருக்கும்

வாசல்கோலப்புள்ளிகளாய்

சிதறிக்கிடக்கும்

அழகான இரவொன்றை

நாம் அருகிலமர்ந்து

ரசித்திருக்க

அங்கொன்றும் ,

இங்கொன்றுமாய்.....

கவிதையின் முற்றுப்புள்ளிகளை

கன்னத்தில் ஏந்திப்பிடித்திருக்கும்

காதல் தேவதை உந்தன்

பருவத்திமிரிரண்டும்  என்

நெஞ்சில் சாய்ந்து

பல்லாங்குழியாட

கவனச்சிதறலை

கவனித்தவளாய்.....

கோடிக்கவிதைகளை

உதட்டு வரிகளில்

ஒளித்து வைத்திருக்கும்

உனக்குள்ளிருந்து

வெட்கத்தில் முக்கியெடுத்த

புன்னகையொன்று

எட்டிப்பார்க்கிறது.....!உருகும் இரவின்

மௌனம் கலைத்து

மடியில் கவிழ்ந்து

கவிதைகள் வாசிக்கச்சொல்கிறாய்....

என் விரல்கள் கொண்டு

உன் உதட்டு வரிகளை

எழுத்துக்கூட்ட......

கண்கள் செருகி

கனவுச்சிறகுகளில்

மேகங்கள் தாண்டி

தேவதைகள் சுற்றித்திரியும்

தேவலோகத்தெருவொன்றில்

மிடுக்காக நடைபோட,

பவனி வரும்

பால்வெளி நிலவிதுவென்று

பார்த்து ரசிக்கும் தேவதைகளுக்கு

அழகின் உவமைகளாய்

உறுதிசெய்யப்பட்டு

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது

பிரம்மன் இழைத்துவிட்ட

பெரிய துரோகமென்று

புலப்படுவதற்கு முன்

புறப்படலாம் வா....!இதோ...

கனவுப்பயணத்தில்

இரவெங்கும் முடிந்திருக்க

பயணக்களைப்பில்

சோம்பல் முறித்து

விடியலின் மடியினில்

துயில் எழுகிறாள் தேவதை....

இல்லை! இல்லை!

தேவதைகளின் தேவதை....!

முதல் முத்தம்....!


அத்தனைமுறை

கொஞ்சிக்கெஞ்சி

கேட்டபின்னும்

வெட்கமாய் இருக்கிறதென்று

வேறு பக்கம் முகம் திருப்பி

தந்திடாத முதல் முத்தத்தை

அந்தப்பிரிவுப் பயணத்தின்

சற்றே துவக்கத்தின்

தூரத்திலிருந்து

சற்றும் எதிர்பாராமல்

உள்ளங்கையில்

உன் இதழ்களை

ஒற்றியெடுத்து

சிறகடித்துப் பறக்கவிட

முத்தத்தின்

மொத்தத்தையும்

சிதறாமல்

சேகரிக்கிறேன்!

உதடுகளை உரசி

உயிர்மூச்சின்

உள் சென்று

நுரையீரல் நிரப்பி

என் இதயத்தின்

அடிவாரத்தில்

சேமித்து வைக்கிறேன்

உயிருதிரும் இறுதி

நொடிவரை

உனதிந்த

முதல் முத்தத்தை....!

அர்த்தப்படுகிறேன்......


வாழ்க்கைப்பயணத்தின்

இரண்டாம் அத்தியாயமொன்று

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு

திருமண பந்தத்தில்

அனுமதி பெற்ற காதலொன்று

இனிதே துவங்கிவிட்டிருக்க ....

இணைந்துகொள்ளத்தயாராகின்றன

விரல்களும், அறிமுகமற்ற

நம் இதயங்களும்....

வரையறுக்கப்பட்ட இந்த

வாழ்க்கையின் எல்லைக்குள்.....பின்னிரவின் விளிம்பில்

என்னருகில் நீ அமர்ந்து

நகம் கடிக்கும் முதலிரவில்

உன் அழகை நான் ரசிக்க

நழுவிச்செல்லும் நடுநிசியும்....

இதோ நம் தேகத்தின்

இதமான கதகதப்பை

வரவேற்றுக்காத்திருக்கும்

போர்வைக்குள்

புரியவிருக்கும்

புனிதப்போருக்கு

ஆயத்தமாகின்ற உதடுகள்

மென்மையாய் ஒற்றியெடுத்து காதலை

வார்த்தைகளின்றி மொழிபெயர்க்க

பருவம் பரபரக்க,

அணு அணுவாய் அனுபவிக்க,

எதிரெதிர் துருவங்கள்

இணைகின்ற இனியவோர் துவக்கம்.......!

இரவிலிட்ட முத்தங்களின்

ஈரம் காய்வதற்குள்,

இங்கிதமற்ற இரவும்

சங்கதி புரியாமல்

விடிந்திருக்க.....

பணி நிமித்தமாய்

வெளியில் கிளம்பிவிட்டிருக்க

வாசலில் வந்து

வழியனுப்பும் உன் விரல்கள்

வா என்றே அழைக்கின்றன.....

வெகு விரைவில் வீடு திரும்பும்

நிர்பந்தங்களுடன்

நிபந்தனை முத்தங்கள்

தந்தனுப்பப்படுகிறேன்......


அப்பொழுதுதான்

கிளம்பிவிட்டிருப்பேன்,

என்னில் நிறைந்திருக்கும்

உன் நினைவுகளில்

தெருமுனையில் திரும்பிவிட்டிருக்க

சிணுங்கும் அலைபேசியோடு சேர்ந்து

நீயும் சிணுங்குகிறாய்.....

என்கிருக்கிறேனென்று

அவ்வப்பொழுது உறுதிசெய்துகொண்டு

வைத்த கண் வாங்காமல்

வாசலில் காத்திருக்கிறாய்.....வீட்டின் முன் கதவை

உட்புற தாளிட்டு ஓடி வந்து

பற்றிக்கொள்ளும் தேகத்தில்

பரவசமடையும் உதடுகள்

பருவ தாகம் தீர்க்க வேண்டி

படுக்கையறை விளையாட்டில்

பகலிரவாட்டம் ஒன்று

விமரிசையாய் துவங்கியிருக்கும்.....உன் அன்பில்

நான் முழுதும் நனைகிறேன்........

உன் காதலில்

நான் முழுமையடைகிறேன்......

உன் வருகையில்

நான் வாழ்க்கையை ரசிக்கத்துவங்கியிருக்கிறேன்......

உன் காத்திருத்தலில்

நான் அர்த்தப்படுகிறேன்!!!

கவனிக்கப்படாத கடவுளே!!!


அன்பெனும் பகிர்தலில்

பொதிந்து கிடக்கும் அரிதான

பொக்கிஷம் வாழ்க்கை,


செலுத்த செலுத்த

துளிர்க்கும்

மலர்ச்செடியாய்!


தன்னலமற்ற

அரவணைப்பின் ஆறுதலில்

அறிமுகம் செய்யப்படுகின்றன

பேதங்களற்ற பிறப்பின்

நற்பெருமை........


அமைதிக்கும், தனிமைக்கும்

அனுமதி தர மறுக்கும்

அயர்வற்ற வாழ்க்கையில்

இனிமையான இரண்டொரு வார்த்தைகள்

நெஞ்சினிக்கப்பேசிவிட்டால்

வறண்ட வாழ்க்கைதான்

சாரலென மாறாதோ.......!


துவண்ட வாழ்க்கைதான்

தூறலென தூறாதோ......!


பகட்டான வாழ்க்கையில்

உண்மையான அன்பை

விலைகொடுத்தும் பெறக்கிடைக்காத

வசதி படைத்த செல்வந்தரே

வறுமைக்கோட்டுக்கு கீழே

வாழ்க்கையை

வாழ்ந்து முடிக்கிறார்.......


காசு,பணம் கணக்கின்றி சேர்த்து

கோயில் குளம் சுற்றித்திரிவோர்க்கு 

அடைய நினைக்கும் அமைதி

இயலாதோர்க்கு ஈகை செய்வதிலும்

அடுத்தவர் மீது அன்பு செலுத்துவதிலும்

வெட்ட வெளியினைப்போல்

கொட்டிக்கிடக்கிறதென்று

தெரிவதேனில்லை........!


கானல் நீராய்

கையில் சிக்காத

காலச்சக்கரத்தில்

களைப்படைந்து போகும் போது

உற்சாகத்தையும்.......


களையிழந்து போகும்போது

உத்வேகத்தையும் தரும்


அன்பெனும் உன்னத உணர்வு

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்

கடந்து சென்றும்

கவனிக்கப்படாத கடவுளே!!!அரிதான மனிதப்பிறவியில்

எதையோ தொலைத்துவிட்ட

தேடல்களில்

பிறவிப்பயனீட்ட மறந்தவர்க்கு

ஞாபகமிருக்கட்டும்

பிறிதொரு ஜென்மம் நிச்சயமில்லை.......!


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் -( மார்ச்-27-2010)


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003263&format=html

பெயர்


வழக்கமாகச்செல்லும்

வழித்தடத்தில்

வெகுநேர காத்திருப்புக்குப்பின்

வந்த

நெரிசலற்ற பேருந்தின்

ஓரத்து இருக்கை

தேடிப்பிடித்து

வேடிக்கை பார்த்துக்கொண்டே வரும்

 நான்...

அந்த வளைவு வரும்போது மட்டும்

கண்கள் விரித்து

பின்னோக்கி விரையும் அந்த

பெயர்ப்பலகையை

முடிந்த வரை

திரும்பிப்பார்த்து விடுகிறேன்.....


இந்நேரம்

யூகித்திருப்பீர்கள்தானே....

அது

அவள் பெயராகத்தான் இருக்குமென்று...

Sunday, March 7, 2010

நீ....நான்.....காதல்......முத்தம்......!கழுத்திலிருந்து

உன்

காது மடல் வரையிலான

என்

உதடுகளின்

பயணத்தில்

சற்று

இளைப்பாரட்டுமா?

உன் உதடுகளில்.....!

இதயம் .......!'இதயம்'

படம் வரைந்து

பாகம்

குறிக்கச்சொன்னார்கள்....

கேள்விக்குறிகள்

இரண்டை

எதிரெதிரே இணைத்து

அதற்குள்

உன்

பெயரெழுதி வைத்து

வந்து விட்டேன்.....

Saturday, March 6, 2010

நீ... நான் ..... காதல் ...... பூ.... !நீ

தோட்டத்தில்

பூப்பறிக்கும் போது

பூக்களெல்லாம்

ஆச்சர்யமாக

பார்க்கின்றன

யாரிந்த பூவுக்கு மட்டும்

தாவணி

கட்டி விட்டதென்று....

நீ... நான் ..... காதல் ...... இதயம்.... !நான் இறக்கும் பட்சத்தில்

என் இதயத்தை

வேறு யாருக்கும்

பொருத்தி விடாதீர்கள்...

வீணாக

ஒரு காதல் பைத்தியத்தை

உருவாக்கிய

குற்றத்திற்கு ஆளாவீர்கள்....