Monday, March 8, 2010

இப்பொழுதெல்லாம்.....!!!



எப்பொழுதும் படுத்ததும்

கிடந்துறங்கும் நான்

இன்று வெகுநேரமாகியும்

அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்

அவளோடு கடந்த

அன்றைய அழகான நினைவுகளை.....

நேரம் போனதே தெரியாமல்

நினைவுகளில் வலம் வர

ஒரு வழியாக கனவுகள்

என் கண்களை ஆக்கிரமித்து

கண்ணயர்ந்து தூங்கிப்போனேன்....


எருமை மாடு எந்திரிடா,

இன்னும் தூக்கத்தப்பாரு! என்ற

அம்மாவின் உரத்த குரலில்

பதறியடித்துப்பார்த்தபோது

மணி எட்டைத்தொட்டுவிட்டிருந்தது....


அவசர அவசரமாய் குளித்து

அம்மாவின் முந்தானையில் தலை துடைத்து

சாப்பிடாமல்கூட விடைபெற்று

படபடப்போடு சைக்கிளை அழுத்த

இன்னும் பத்து நிமிடங்களே எஞ்சியிருந்தது


வழக்கமான இடத்தில் நிறுத்திவிட்டு

பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது....

என்னவளை சுமந்து வரும்

எங்களூர் பேருந்து

தற்காலிக தாயாகிப்போன

தற்பெருமையில்

சற்று தாமதமாகவே வந்து நின்றது......


அவளைத்தேடும் பணியில் கண்கள்

முடுக்கிவிடப்பட்டிருக்க, மறுபக்கம்

கைகள் கம்பிகளில் தொற்றிக்கொள்ள

தொடர்கிறது நகரத்தை நோக்கிய பயணம்.....


பார்த்தும் பார்க்காதது போல்

பூத்திருந்தவள்

பூவுக்கும் புன்னகைக்கத்தெரியுமென்று

சின்னதாய் உறுதி செய்கிறாள்....


மென்மையாய் நலம் விசாரிக்க

வெட்கத்தைப் பதிலாய் தருகிறாள்...

நான் என்ன பேசுவதென்று தெரியாமல்

என்னென்னவோ பேச

சிக்கனமாய் வார்த்தைகளை

சிதறடித்து ரசிக்க வைக்கிறாள்....


புத்தகங்களை நீட்ட, எடுத்து

மடியில் சேர்த்து வைத்துக்கொள்கிறாள்...

அவைகளும் அதற்காய் காத்திருந்தவை போல்

பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்கின்றன....


இப்படியான பேருந்துப்பயணத்தில்

இன்றேனும் சொல்லிவிட வேண்டுமென்ற

முடிவோடு வந்து , ஒவ்வொரு நாளும்

திரும்பிப்போகிறேன் ....ஒருவேளை

அந்தச்சின்னப்புன்னகையை

இழக்க நேரிடுமோ என்ற

பதிலற்ற நெருடலொன்றில் .....


இனி கடிதமே சிறந்த வழியென்று - என்

காதலை எழுத்துக்களில் சேகரித்து

எடுத்துச்சென்றபோது- அன்றைய

பேருந்தில் அவள் வந்திருக்கவில்லை.....


ஏமாற்றத்துடன் அவள்

தோழியிடம் கேட்டபோது

கல்யாணம் நிச்சயமானவளுக்கு இனி

கல்லூரி எதற்கென்று

பெற்றோர் சொல்லிவிட்டார்களாம்......


நொறுங்கிய

இதயத்தின் சிதறல்களை

என்ன செய்வதென்று அறியாமல்

விரக்தியில் மெதுவாய்

வீடு திரும்பிவிட்டிருந்தேன்......


இப்பொழுதெல்லாம்

அவளின்றிக்கடந்து செல்லும்

எங்களூர்ப்பேருந்தை

பிடிக்கவும் இல்லை...

எனதிந்த விடியல்கள்

பரபரப்பாய் விடிவதும் இல்லை......!

No comments: